Pongu Tamizh Pongu Tamizh  

புலிகளின் கோட்டையில் சிங்கங்களின் கூட்டம்!

புலிகளின் கோட்டையில் சிங்கங்களின் கூட்டம்!
இளந்திரையன்

 

ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது. 

முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொடர்பானதாகவும் ஊடக அறம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைகளை சுருக்கவும் தவிர்க்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு

 

சிறிலங்கா அரசாங்கம் முதற்தடவையாக கொழும்புக்கு வெளியே கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலகத்தில் தனது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

அரசாங்க நிர்வாகத்தை மாத்திரமல்ல அமைச்சரவையின் செயற்பாடுகளையும் பன்முகப்படுத்தும் நோக்குடன் ஏனைய மாவட்டங்களில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு செலவான பணத்தைக் கணக்கிடுவதில் கூட அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது.

வட மாகாணத்தில் எரிபொருட்களின் விலைகளில் சிறியளவு குறைப்புச் செய்யப்பட்டதைத் தவிர, இந்த அமைச்சரவைக் கூட்டத்தினால் அந்தப் பிரதேச மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. இந் நிலையில், கிளிநொச்சியில் நிகழ்ந்த இந்த அமைச்சரவைக் கூட்டம் சொல்லும் அரசியல் செய்திகள் என்ன?

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளின் இராஜதானியாக விளங்கியது.

இந் நகரத்தில் தமக்கென நிர்வாகக் கட்டமைப்புக்களை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஒரு தனியரசுக்குரிய எல்லா வகையான கட்டமைப்புக்களையும் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

இக் கட்டமைப்புக்களையும், அதன் செயற்பாடுகளையும் பார்த்த சர்வதேச சமூகங்களும், ஊடகங்களும் வியப்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தன.

இந் நிலையில், தமிழா நீ தனியரசு அமைக்க புறப்பட்டாயே.....பார்! நீ மந்திராலோசனை நடாத்திய இடத்தில் நான் புகுந்து விட்டேன். உனது இராசதானி இப்போ எனதாக மாறிய காட்சியைக் கண்டுகளி என்று கூறுவது போல ராஜபக்சாக்கள் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் செயலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்தியுள்ளார்கள்.

வெற்றி கொண்டவன் தோற்கடிக்கப்பட்டவன் மீது புரியும் ஒரு பலாத்கார நிகழ்வாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் இச் செயற்பாடு அமைந்துள்ளது.

தனது வெற்றியைப் பறைசாற்றவும், எமது தோல்வியை முத்திரையிட்டுக் காட்டவும் ராஜபக்சாக்கள் மேற்கொண்ட ஒரு குறியீட்டுச் செயல்முறையாகவே இந் நிகழ்வு அமைந்துள்ளது.

சிறிலங்காவின் இந்த அமைச்சரவைக் கூட்டத்தை ராஜபக்சாக்கள் தமிழ் மக்களின் முதுகில் சுட்ட ஒரு அரசியல் குறியாகவே நோக்க வேண்டியுள்ளது.

இது கூறும் இரண்டாவது செய்தியாக இன்னொன்றும் உள்ளது. சோழப் படையெடுப்பால் அனுராதபுரத்தில் இருந்த சிங்களத் தலைநகரம் பொலநறுவைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியப் படையெடுப்புக்களால் சிங்களத் தலைநகரம் தெற்கு நோக்கி நகர்ந்து சென்றது.

அநுராதபுரத்தில் இருந்து பொலநறுவை, தம்பதேனிய, குருநாகல, கண்டி, கொழும்பு என சிங்களத் தலைநகரங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன. தற்போது, அந்த வரலாற்றுக் கால இந்தியப் படையெடுப்புக்கு பதில் சொல்லும் பாணியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி அநுராதபுரத்தையும் கடந்து வடக்கின் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை ராஜபக்சாக்கள் நடத்திக் காட்டியுள்ளார்கள்.

இதன் ஊடாக ஈழத் தமிழ் மக்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு பெரும் செய்தியை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து மூன்றாவது செய்தி இன்னொரு பரிமாணத்தைக் கொண்டது. அதாவது தலைநகரங்களை மாற்றும் சீனாவின் பாணியை பின்பற்றப் போகும் செய்தியின் தொடக்கம் இதில் இருக்கிறது.

இது ஒரு இராஜதந்திரப் பரிபாசை. 1984ஆம் ஆண்டு மேற்கு ஐரோப்பாவுக்கு வியஜம் செய்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சைப்பிரஸில் தரித்துச் சென்றார்.

இது குறித்து துருக்கிய, சைப்பிரஸ் பாணி படை நடவடிக்கை ஒன்றுக்கான வாய்ப்பு இலங்கை மீது இந்தியாவுக்கு இருக்கின்றது என்ற செய்தியை இராஜதந்திரப் பரிபாசையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு அவர் இவ்வாறு வெளிப்படுத்தியதாக இராஜதந்திரிகள் அப்போது வியாக்கியானம் கூறினர்.

அவ் வகையில் கிளிநொச்சியில் நிகழ்ந்த ராஜபக்சக்களின் மந்திரிசபைக் கூட்டம் இன்னொரு இராஜதந்திர பரிபாசையாகும்.

நான்காவது பரிமாணம் என்னவெனில் தமிழ் மண்ணை சிங்கள மயமாக்கும் இனக் கபளீகர நடவடிக்கையின் இன்னொரு வெளிப்பாடாகவும் இது அமைந்திருக்கிறது. 

கிளிநொச்சியை சிங்கள, பௌத்த தேசியத்தின் வடபுலக் கோட்டையாக மாற்றுவதற்கான ராஜபக்சாக்களின் முனைப்பின் வெளிப்பாடாகவே இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழர் தாயகத்தை ஏற்கெனவே சிங்கள, பௌத்த மயப்படுத்தும் வேலைகளை படைத்தரப்பினர் ஊடாக சிறிலங்கா அரசு கச்சிதமாக மேற்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக சிறிலங்கா அரசு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

இதனுடாக, வடபகுதியில் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான இன்னொரு காலடியை சிறிலங்கா அரசு எடுத்து வைத்துள்ளது.

கிளிநொச்சியில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரச செயலக மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றியிருந்தார்.

பகைமை அரசியலைக் கைவிட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முற்படும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாமல் இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இங்கே மக்களைத் தவறாக வழிநடத்த முற்படும் அரசியல்வாதிகள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் என்பதை சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும்.

வன்னியில் கடந்த வருடம் மே மாத நடுப்பகுதியுடன் போர் முடிவுக்கு வந்த அரசியல் செயன்முறைகளைப் பொறுத்தவரை முன்னுரிமை கொடுக்க வேண்டிய விவகாரங்களுக்கு சிறிலங்கா அரசு முன்னுரிமை வழங்காததை நாம் காணலாம்.

கிளிநொச்சியில் மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் உரிய இருப்பிட வசதிகள் இன்றி, அடிப்படைக் கல்வி வசதிகளின்றி, போதிய மருத்துவ வசதிகளின்றி, தமது வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளின்றி பெரும் அவலங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மக்களின் துயரமான வாழ்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச ஊடகங்களும் வெளிக்கொண்டு வந்துள்ளன. இம் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுமில்லை.

ஆனால் இந்த அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்று முடிந்த பின்னர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்த சிறிலங்காவின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நோக்கத்துக்காகத் தேவையானால் தனியார் நிலங்களையும் அரசாங்கம் சுவீகரிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனை நியாயப்படுத்த கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அமெரிக்கா பாதுகாப்பு வலயங்களைப் பேணி வருவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேவையேற்படின் மேலும் அதிகமான தனியார் நிலங்களை அரசாங்கம் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்காகச் சுவீகரிக்கும் என்ற அமைச்சரின் அறிவிப்பு ஏற்கனவே தமது நிலங்களைப் பறிகொடுத்து நிற்கும் வடபகுதி தமிழ் மக்களைப் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

போர் முடிவுற்றதைத் தொடர்ந்து இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக தமிழ் மக்களை மேலும் அச்சுறுத்தக்கூடிய அறிவிப்புகளையே சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது.

இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டதாக சர்வசே சமூகத்துக்கு கூறி வருகின்ற சிறிலங்கா அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில், சிங்கள, பௌத்த மற்றும் இராணுவ மயப்படுத்தப்பட்ட பிராந்தியங்களிலேயே வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வு அமைய வேண்டும் என்பதையே கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டத்தின் ஊடாக சிறிலங்கா அரசு சொல்லி நிற்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான நியாயமான அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல், போரினால் ஏற்பட்ட வடுக்களைப் போக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற எந்த நல்லிணக்க முயற்சியும் முழுமையான வெற்றியினைத் தரப்போவதில்லை.

7/25/2010 8:14:32 AM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்